Saturday, March 28, 2009

தமிழக மாணவர்களுக்கு குண்டு வீழும் வன்னி மண்ணில் இருந்து ஒரு கடிதம்..


தமிழக மாணவர்களுக்கு குண்டு வீழும் வன்னி மண்ணில் இருந்து ஒரு கடிதம்
திகதி: 28.03.2009 // தமிழீழம் // [எல்லாளன்]
உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!‏

எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே!

தமிழே உயிரே வணக்கம், தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"

முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு,

உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!

உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்!

மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்!

அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும் ஆட்லரியாலும் அடித்து நூற்ருயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள்.

இன்னும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை, சுதந்திர ஊடகம் இல்லை, கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.

யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?

நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா?
நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?

சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் சகோதரா ! சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான். தொப்புள் கொடி உறவுகளே கூப்பிடு தூரத்தில் தானே உள்ளீர்கள். எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை.

இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் முத்துகுமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.

இந்திய படை வீரர்கள் முன்னணி களத்திலே ,
இந்திய போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே,
இந்திய உளவு விமானங்கள் முல்லைத்தீவு வான் பரப்பிலே.

சிறீலங்காவுடன் என்றால் விடுதலை புலிகள் என்றோ வெற்றி சூடி ஈழம் முடித்தே விடுவார்கள். ஆனால் நாம் போராட வேண்டியதோ இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா இராணுவத்தோடல்லவா.

இது தாங்க முடியாத தம்பி தியாக சிகரம் முத்துக்குமரன் தன்மீது தீமூட்டி இதனை கொணர்ந்து இன்று இது காட்டுத்தீயாக பரவி தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.

மாணவ நண்பர்களே!

உங்கள் கைகள் தான் கறை படியாதவை.
உங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை.
நீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள்.

உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும்
உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும்

ஓயாது ஒலியுங்கள், நீங்கள் ஓய்ந்தால் நாங்கள் வீழ்வது மட்டுமல்ல நாளை இருக்கவும் மாட்டோம்.

இதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.

இப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள்.

கந்தக காற்றதனே சொந்தமென ஆகி கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகிவந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம்.

வாழ்வோ சாவோ இனிஎல்லாம் உம் கையில்.

உங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம். எமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.

ஒலிக்குமா உங்கள் குரல்
கிடைக்குமா உங்கள் கரம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
சாவின் மடியில் உள்ள
ஈழ தமிழர் சார்பில்
நான்

இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன்.

Sunday, March 1, 2009

தமிழ்’ஈன’த்தலைவனே... இதற்கு தானே ஆசைப் பட்டாய்...

”இந்த உயிர் இனி எப்போதும் உங்கள் உயிர்..”, ஆஹா.. எவ்வளவு உருக்கமாய் எழுத முடிகிறது உங்களால்.. அது சரி இத்தனை ஆண்டுகளாய் இப்படி எழுதித்தானே தமிழன் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. அது உங்களுக்கு கை வந்த கலை ஆச்சே..
ஆனால் பாவம்.. நீங்கள் .. இன்னும் முத்துக்குமாரின் மரணத்துக்கு முந்தைய ஏமாளி தமிழன் நினைப்பிலே இருந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..













உங்கள் தமிழினத் தலைவர் முகமூடியை தன் மரணசாசனத்தின் மூலம் கிழித்தெறிந்தான் எங்கள் தோழன் முத்துக்குமார். அதன் பிறகு போலி முகத்தை வெளியே காட்ட முடியாமல் மருத்துவமனையிலே பதுங்கிக்
கொண்டீர்கள். முத்துக்குமார் பற்ற வைத்த எழுச்சி தீயை அணைய விடாமல் போராட்டத்தை தீவிரப்படுத்திய வழக்கறிஞர்கள் வாயை அடைக்க வழி தேடிக்கொண்டிருந்த உங்களுக்கு கூமுட்டை சு.சாமி விவகாரம் சிக்கியது.
போதாதா..
உங்க ராசதந்திரத்தை பயன் படுத்த போலீஸ் நாய்களை கட்டவிழ்த்து விட்டீர்கள்...
அந்த நாய்களும் தங்கள் பரம்பரை பகையை தீர்த்துக்கொண்டன. வழக்கறிஞர்களும் இப்போது தங்கள் உரிமைக்காக போராட, ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் திசை திரும்பிடுச்சு.. உங்க ஆசையும் நிறைவேறிடுச்சு.. உணர்வுப்பூர்வமாக பேசி எழுச்சியை.. உண்டு பண்ணிக்கொண்டிருந்த சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டததில் கைது பண்ணியாச்சு.. இனிமே ஒரு பயலும் எதுவும் பேச மாட்டான்.. சாகட்டும் ஈழத்தமிழன்.. செத்து ஒழியட்டும்...
போதுமா.. இதற்கு தானே ஆசைப்பட்டாய்...

வெட்கமில்லாமல் நாங்களும் கோசம் போடுவோம்..
தமிழினத்தலைவன் வாழ்க...

மருத்துவரைய்யா...















நன்றி குமுதம்.காம்

Wednesday, January 21, 2009

வணக்கம்.. நாங்க புதுசா வந்துருக்கோம்ப்பு..

வணக்கம் நண்பர்களே.. நீண்ட நாட்க்களாக வலைப்பதிவுகளை வாசித்து வருபவன். நாமும் எழுத வேண்டும் என பல முறை நினைத்தும்.. தள்ளி போன வாய்ப்பு இப்போது நிறைவேறி உள்ளது. புதிதாக எழுதுவதால் ’கைப்புள்ள’ மாதிரி எதையாவது எழுதினால் சங்கத்து உறுப்பினர்கள் மன்னித்து திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ..